காங்கிரசின் திமிர்

காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார். அண்மையில் அவர், “இலங்கைச் சிக்கலில் இதற்கு மேல் இந்தியா எதுவும் செய்ய இயலாது” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.

தமிழர்களை அழிக்கப் போர்க் கருவிகளைக் கொடுத்து, சிங்களப் படைக்கு பயிற்சி கொடுத்து, ஆளனுப்பி குண்டு போட வைத்து, உளவு பார்த்து இப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தபின் இன்னும் என்னதான் செய்ய இருக்கிறது?

இலங்கை அரசைப் பார்த்துச் சொல்ல வேண்டியதை தமிழர்களைப் பார்த்துச் சொல்லும் இவர் பக்தவச்சலத்தின் உண்மையான பிறங்கடைதான். ஒரு இனமே அழிந்து கொண்டு இருக்கும் நிலையிலும் இப்படி திமிரோடு பேச காங்கிரசாரைத் தவிர யாருக்குத்தான் மனம் வரும்?

1 Comment »

  1. 1
    tholar Says:

    இலங்கைப்போரை பின்னனியிலிருந்து இயக்குவதே இந்தியாதான் : விக்கரமபாகு

    on 01-03-2009 00:03

    Favoured : None

    Published in : செய்திகள், இலங்கை

    தமிழர்கள் கொன்றொழிக்கப்படும் கொடும் போரை சிறீலங்கா அரசு அன்றி, இந்தியாவே நடத்துகின்றது: விக்கரமபாகு கருணாரத்ன : இலங்கையில் தமிழ் மக்கள் நாளாந்தம் கொன்றொழிக்கப்படும் கொடும் போரை சிறீலங்கா அரசு அன்றி, இந்தியாவே நடத்தி வருவதாக, இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

    சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது அரசும் வெறும் பொம்மைகளாக இருக்க, அவர்கள் மூலம் இந்தியாவே போரை திட்டமிட்டு நடத்தி வருவதாகவும், இதனாலேயே அனைத்துலக நாடுகள் இதில் தலையிடுவதில் இராசரீக சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உலகின் இடதுசாரிகள், மற்றும் தொழிற்கட்சிகளை உள்ளடக்கிய நான்காம் மண்டல அமைப்பின் அனைத்துலக மாநாடு கடந்த 21ஆம் நாள் முதல் 25ஆம் நாள்வரை நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் இடம்பெற்றது.

    இதன்போது இலங்கையில் இடம்பெறும் போர் பற்றி பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்ததுடன், அங்கு ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக ஈழப்பிரச்சினை பற்றி ஊடகவியலாளர்கள் மாநாடும் நடைபெற்றிருந்தது. இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கருத்துரைத்த கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஈழத்தமிழ் மக்களிற்கான உரிமைகள் மறுக்கப்பட்டதாலேயே அவர்கள் பெரும்பான்மை சிங்கள அரசுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் எனவும், மக்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் போராட்டத்தை சிறீலங்கா அரசினால் அடக்கிவிட முடியாத எனவும் குறிப்பிட்டார்.

    வன்னியில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் தாக்குதல்களால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதாகக் கண்டனம் தெரிவித்த அவர், போரை நிறுத்தி பேச்சுக்குச் செல்லுமாறு சிறீலங்கா அரசுக்கு அனைத்துலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


RSS Feed for this entry

பின்னூட்டமொன்றை இடுக